நாலடியார் 400 ~ பாடல் 259
ஈக்களும் மாக்களும்
பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறும் ஈப்போல் - இழிந்தவை
தாம்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.
தன்னுள் இனிய சுவையுடைய தேனைக்கொண்டு, நறுமணத்துடன் மலர் இருந்தாலும், ஈயானது அதைவிடுத்து, மலம் போன்ற இழிவான பொருட்களையே விரும்பிச் செல்லும். அதுபோல இழிவான மனமுடையவர்களுக்கு, அறிவில் சிறந்த அல்லது ஞானோதயம் அடைந்த பெரியோர்கள் கூறும் இனிமையான, வாழ்வில் தெளிவை ஏற்படுத்தக்கூடிய, தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல கருத்துகளால் எந்தப் பயனும் இல்லை.
எப்போதும் மலத்தையே விரும்பி, அதைத் தேடிச் சென்று உழலும் ஈக்கு, அழகான, நறுமணம் மிக்க, தேனை உடைய மலரின் அருமை தெரியாது. அதன் அருமை பற்றி எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் அது தனது இழிவான விருப்பத்தை மாற்றிக் கொள்ளாது. ஆனால், ஆர்வத்துடன் தேனைத் தேடிச் சுறுசுறுப்பாக அலையும் தேனீக்கு மலரின் அருமை பற்றி யாரும் எடுத்துரைக்கத் தேவையில்லை.
பொருள் சார்ந்த வாழ்வின் மீது மிகுந்த பற்றுடன் இருக்கும் மனிதர்கள் அந்த ஈயைப் போன்றவர்களே. ஞானோதயம் அடைந்த குருமார்கள் கூறும் ஆன்மீகக் கருத்துகளோ, மெய்ஞானம் அடைவதற்கான வழிமுறைகளோ அவர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
ஆன்மீக வழியில், உண்மையை உணரும் தேடலுடன் செல்லும் சாதகர்களுக்கு, ஒரு குருவின் வழிகாட்டுதலின் அருமை பற்றி யாரும் எடுத்துரைக்கத் தேவையில்லை.
குறிப்பு: இதன்காரணமாகவே, ஆன்மீகம் பற்றிய ஆர்வமே இல்லாதவர்களின் நிலை பற்றித் திருமதி ஸ்வாமி அடிக்கடி வருத்தப்பட்டாலும்கூட, ஸ்வாமி வலியச்சென்று யாரிடமும் ஆன்மீகம் பற்றிப் பேசுவதில்லை.
~ஸ்வாமி
@PrakashSwamy
No comments:
Post a Comment
Thank you for investing precious time to view Life in our vibrant Universe through Swamy's lens. Kindly reflect on what you've learned and leave a comment. Feel free to share this post with other enthusiasts. Be Joyful & spread the cheer!