ஔவைக் குறள் 203 ~ குருவும் சிவமும்!
குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு
அருவமாய் நிற்கும் சிவம்.
அருவமாய் நிற்கும் சிவம்.
ஒரு குருநாதனைச் சரணடைந்து, அவருடன் எந்தவகையிலாவது தொடர்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு, சிவம் என்கிற பரப்பிரம்மம் அனுபவபூர்வமாகத் தெரியாது.
முக்தியே வாழ்வின் குறிக்கோள் என்பதை வலியுறுத்தும் சனாதன தர்மம் என்கிற பாரத கலாசாரத்தில், முக்தி அடைய வழிகாட்டும் குருமார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் எப்போதுமே அளிக்கப்பட்டுள்ளது. தொன்மையான நமது கலாசாரத்தின் அடிப்படையையே அறியாமல் பலர் வெற்றிமீது வெறிகொண்டு அலையும் இக்காலத்திலும், அதில் எந்த மாற்றமும் இல்லை.
குருவுக்கு மகத்தான முக்கியத்துவம் அளிக்கப்படும் காரணம், முக்தி அடையும் வழிமுறைகளை மற்றும் செயல்முறைகளை, அவர்கள் தங்களது உள் அனுபவம் மூலமாக அறிந்திருப்பதுதான். அப்படி மெய்ஞானம் உணர்தல் என்ற நேரடி அனுபவம் பெற்றவர்களை, ஞானோதயம் அடைந்தோர் என்று கொண்டாடுகின்ற கலாசாரம் இது. அவர்களுக்கு, சிவம் அல்லது இறைத்தன்மை அல்லது எங்கும் நிறைந்த பரப்பிரம்மம் என்பது, கோவில்களில் வழிபடப்படும் இறை உருவங்களைத் தாண்டிய, எங்கும் பரவி நிறைந்த, எல்லா உயிர்களிலும் - மனிதர்கள் உட்பட - உள்ளே உறையும் உயிர் என்பது, நேரடியான உள் அனுபவம் மூலம் தெரியும். “குருவே சிவம்” என்பதும், ஞானோதயம் அடைந்தோரின் உயர்ந்த நிலையை உணர்த்துகின்றது.
அத்தகைய அற்புத அனுபவமாகிய தன்னிலை உணர்தல், எல்லாருக்குமே சாத்தியம் என்று உணர்ந்ததால், அதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்முறைகளை அவர்கள் பிறருக்கு வழங்குகின்றனர்.
அத்தகைய மெய்ஞானத்திற்கான வழிகாட்டியாக விளங்கும் ஏதாவது ஒரு குருவைப் பணிந்து, அவரது வழிகாட்டுதலின்படி முயற்சி செய்யாதவர்களுக்கு, இறைவன் என்பது அருவமான ஒன்றாகவே இருக்கும். அவர்கள் உருவமற்ற இறைவனைத் தேடிப் பல திருத்தலங்களுக்குச் சென்றாலும், இறைவனைப் பற்றிய பற்பல பிரசங்கங்களைக் கேட்டாலும், குருவின் வழிகாட்டுதல் இல்லாமல், அவர்களுக்குத் தன்னுள்ளே இறைத்தன்மையை உணரந்து, பேரானந்தத்தில் திளைக்க வாய்ப்பில்லை.
குறிப்பு: மதகுருமார்கள் அனைவரும் ஞானோதயம் அடைந்த குரு அல்ல. அதனால்தான், ஆன்மீகம் என்பது, மதம் அல்லது சமயத்தைச் சாரந்ததில்லை. எந்த மதத்தைச் சார்ந்தோரும், எந்த ஞானோதயம் அடைந்த குருவின் வழியையும் பின்பற்றலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* ஔவைக் குறள் ~ ஸ்வாமியின் புதிய, எளிதான, குறள் வடிவில் அமைந்த ஔவையாரின் ஆன்மீக இலக்கியப் பெட்டகத்தை விளக்கும்,குறுவலைப்பதிவுத் தொடர்.
ஸ்வாமியின் நூற்றுக்கணக்கான மற்ற வலைப்பதிவுகளை நீங்கள் சுவைத்து மகிழலாம்.
Swamystery, Been There Seen That, Swamyview, Swamyverse, Swamygraphy,SwamyQuote (மேற்கோள்கள்),Swamyem (200+ #தினம்ஒருபதிகம் பதிகம் + விளக்கம்)
Very shameful to compare our great Avvayar with a person who killed his wife@
ReplyDelete