View vibrant Life in our Universe through Swamy's lens!
Showing posts with label ஔவையார். Show all posts
Showing posts with label ஔவையார். Show all posts

2 May 2017

ஔவைக் குறள் 73 ~ உள்ளமே கோயில், உணர்வே சிவம்!

ஔவைக் குறள் 73 ~ உள்ளமே கோயில், உணர்வே சிவம்

உள்ளமே பீடம் உணர்வே சிவலிங்கம்
தெள்ளியர் அர்ச்சிக்கும் ஆறு.

தமது ஹிருதயத்தைப் (உடல் உயிரோட்டத்துடன் இருக்க ரத்த ஓட்டத்தை நிகழ்த்தும் இதயம் அல்ல) பீடமாக்கி, அதில் உள் உணர்வைச் சிவலிங்கமாகப் பூஜித்து வழிபடும் முறையை அறிந்தோர் அறிவுத் (எதையும் பகுத்துப்பார்க்கும் காரண அறிவு அல்ல) தெளிவுடையோர் (ஞானோதயம் அடைந்தோர்).
பக்தர்கள் கோயிலுக்குச் சென்று, மலர்கள் மற்றும் அர்ச்சனைப் பொருட்களை அர்ச்சகரிடம் தந்து, அங்குள்ள இறைவனது உருவத்திற்குப் பூஜை செய்யக் கண்டு, பக்திப் பரவசமடைவது இயல்பு. இறை நம்பிக்கை சார்ந்த இவ்வழிபாட்டு முறையில் தவறேதுமில்லை என்றாலும், இத்தகைய வெளிப்புறச் செயலால் ஒருவர் மெய்ஞானம் அடைவது மிக அரிது.

அறிவுத் தெளிவுடையோர், அதாவது ஞானோதயம் அடைந்தோர், இறைவனை வெளியே தேடுவதில்லை. அவர்கள் தமது உள்ளத்தையே (ஹிருதயம் எனப்படும் உயிரின் இருப்பிடமான ஆன்மீக மையம்) இறைவனது திருவுருவம் அமைந்துள்ள பீடமாக்கி (ஆவுடையார்), தமது உள் உணர்வையே அருவமாகிய இறைவனது திருவுருவான சிவலிங்கமாக (படைப்பின் முதல் வடிவமாகிய அருவுருவம்), படைத்தலில் உள்ள அனைத்து உயிர்களையும் போலத் தம்முள்ளும் உறையும் இறையைப் (சிவமே எங்கும் நிறைந்த பரப்பிரம்மம்) பூஜித்து வழிபடுவர். இதுவே ஈசனை வழிபடுவதற்கான சிறந்த வழியாகும்.

அறுபத்துமூவருள் ஒருவராகிய பூசலார் நாயனார், தனது உள்ளத்தில் ஒரு மாபெரும் திருக்கோயிலையே, ஒவ்வொரு கல்லாக அடுக்கி, அற்புதமான முறையில் உருவாக்கினார். அவர் தனது உள்ளக்கோயிலில் ஈசனை எழுந்தருளச் செய்யக் குறித்த அதே நாளன்று, மாமன்னனாகிய காடவர்கோனும் (ராஜசிம்மன் என்கிற இரண்டாம் நரசிம்மவர்மன்) தான் கட்டிய பிரம்மாண்டமான புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவுசெய்தான். அப்போது கருணைக்கடலாகிய சிவபெருமான் அவனது கனவில் தோன்றி, தான் பூசலாரின் திருக்கோயிலில் எழுந்தருள வேண்டியிருப்பதால், அரசனது கைலாசநாதர் கோயில் குடமுழுக்கு விழாவை வேறொரு நாளைக்கு மாற்றுமாறு அறிவுறுத்தினார். தன்னைவிடப் பெரிய கோயிலைக் கட்டியது யார் என்று வியந்த மன்னன், பூசலாரைக் கண்டு வணங்கி அவரது கோயில் எங்குள்ளது என்று வினவியபோது, அவர் மலர்ந்த முகத்துடன் தனது ஹிருதயத்தைச் சுட்டிக்காட்டினார். இச்சம்பவம் ஔவைக்குறள் 73ல் பொதிந்துள்ள பேருண்மையைத் தெளிவாக்குகின்றது.


ஸ்வாமியின் ஒளவைக்குறள் குறுவலைப்பதிவுத்தொடர், குறள் செய்யுள் வடிவத்தில் அமைந்திருக்கும் ஒளவையாரின் அற்புத ஆன்மீகப் பெட்டகத்தின் விளக்க உரை.  

27 Apr 2017

ஔவைக் குறள் 203 ~ குருவும் சிவமும்

ஔவைக் குறள் 203 ~ குருவும் சிவமும்!

குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு
அருவமாய் நிற்கும் சிவம்.

ஒரு குருநாதனைச் சரணடைந்து, அவருடன் எந்தவகையிலாவது தொடர்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு, சிவம் என்கிற பரப்பிரம்மம் அனுபவபூர்வமாகத் தெரியாது.

முக்தியே வாழ்வின் குறிக்கோள் என்பதை வலியுறுத்தும் சனாதன தர்மம் என்கிற பாரத கலாசாரத்தில், முக்தி அடைய வழிகாட்டும் குருமார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் எப்போதுமே அளிக்கப்பட்டுள்ளது. தொன்மையான நமது கலாசாரத்தின் அடிப்படையையே அறியாமல் பலர் வெற்றிமீது வெறிகொண்டு அலையும் இக்காலத்திலும், அதில் எந்த மாற்றமும் இல்லை.

குருவுக்கு மகத்தான முக்கியத்துவம் அளிக்கப்படும் காரணம், முக்தி அடையும் வழிமுறைகளை மற்றும் செயல்முறைகளை, அவர்கள் தங்களது உள் அனுபவம் மூலமாக அறிந்திருப்பதுதான். அப்படி மெய்ஞானம் உணர்தல் என்ற நேரடி அனுபவம் பெற்றவர்களை, ஞானோதயம் அடைந்தோர் என்று கொண்டாடுகின்ற கலாசாரம் இது. அவர்களுக்கு, சிவம் அல்லது இறைத்தன்மை அல்லது எங்கும் நிறைந்த பரப்பிரம்மம் என்பது, கோவில்களில் வழிபடப்படும் இறை உருவங்களைத் தாண்டிய, எங்கும் பரவி நிறைந்த, எல்லா உயிர்களிலும் - மனிதர்கள் உட்பட - உள்ளே உறையும் உயிர் என்பது, நேரடியான உள் அனுபவம் மூலம் தெரியும். “குருவே சிவம்” என்பதும், ஞானோதயம் அடைந்தோரின் உயர்ந்த நிலையை உணர்த்துகின்றது.

அத்தகைய அற்புத அனுபவமாகிய தன்னிலை உணர்தல், எல்லாருக்குமே சாத்தியம் என்று உணர்ந்ததால், அதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்முறைகளை அவர்கள் பிறருக்கு வழங்குகின்றனர்.

அத்தகைய மெய்ஞானத்திற்கான வழிகாட்டியாக விளங்கும் ஏதாவது ஒரு குருவைப் பணிந்து, அவரது வழிகாட்டுதலின்படி முயற்சி செய்யாதவர்களுக்கு, இறைவன் என்பது அருவமான ஒன்றாகவே இருக்கும். அவர்கள் உருவமற்ற இறைவனைத் தேடிப் பல திருத்தலங்களுக்குச் சென்றாலும், இறைவனைப் பற்றிய பற்பல பிரசங்கங்களைக் கேட்டாலும், குருவின் வழிகாட்டுதல் இல்லாமல், அவர்களுக்குத் தன்னுள்ளே இறைத்தன்மையை உணரந்து, பேரானந்தத்தில் திளைக்க வாய்ப்பில்லை.

குறிப்பு: மதகுருமார்கள் அனைவரும் ஞானோதயம் அடைந்த குரு அல்ல. அதனால்தான், ஆன்மீகம் என்பது, மதம் அல்லது சமயத்தைச் சாரந்ததில்லை. எந்த மதத்தைச் சார்ந்தோரும், எந்த ஞானோதயம் அடைந்த குருவின் வழியையும் பின்பற்றலாம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 
* ஔவைக் குறள் ~ ஸ்வாமியின் புதிய, எளிதான, குறள் வடிவில் அமைந்த ஔவையாரின் ஆன்மீக இலக்கியப் பெட்டகத்தை விளக்கும்,குறுவலைப்பதிவுத் தொடர்.   

ஸ்வாமியின் நூற்றுக்கணக்கான மற்ற வலைப்பதிவுகளை நீங்கள் சுவைத்து மகிழலாம்.
Swamystery, Been There Seen That, Swamyview, Swamyverse, Swamygraphy,SwamyQuote (மேற்கோள்கள்),Swamyem (200+ #தினம்ஒருபதிகம் பதிகம் + விளக்கம்)

ஸ்வாமியுடன் ஃபேஸ்புக், கூகிள்+ மற்றும்ட்விட்டரில் தொடர்பு கொள்ளலாம்.      

24 Apr 2017

ஔவைக் குறள் 152 ~ வழிமுறையும் செயல்முறையும்!

ஔவைக் குறள் 152 ~ வழிமுறையும் செயல்முறையும்!


ஔவைக்குறள் தொடரை, ஒரு மாற்றுச் சிந்தனைக் குறளுடன் தொடங்குவோம்.


வாக்கும் கருத்தும் மயங்கும் சமயங்கள்
ஆக்கிய நூலினும் இல்.


சிறந்த சமயச் சொற்பொழிவுகள், அவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் சிந்தனைத் துளிகள் அல்லது கருத்துக்கள், தீவிரமான ஆர்வத்துடன் ஒருவர் சார்ந்திருக்கும் சமயத்தில் உள்ள புனிதமான நூல்கள் ஆகியவை முக்தியை அளிக்காது.


பெரும்பாலான மனிதர்கள் ஏதேனும் ஒரு சமயத்தைத் (மதம்) தங்கள் பிறப்பிலிருந்து சாரந்திருக்கிறார்கள். சிலர் இடையில் வேறொரு சமயத்துக்கு மாறவும் கூடும். எல்லாச் சமயங்களிலும் பல புனித நூல்கள் உள்ளன. அவற்றில் நன்கு தேர்ச்சி பெற்ற அந்த சமயத்தில் உள்ள பெரியோர், அவற்றிலுள்ள மெய்ஞானம் அடைவது, ஒழுக்கத்துடன் வாழ்வது, இறையுணர்வு போன்றவற்றை விளக்கிக் கூறுவதுடன், அவற்றைப் பற்றிய தங்களது சிந்தனை மற்றும் அனுபவம் சார்ந்த கருத்துக்களையும் எடுத்துரைப்பார்கள். ஆனால், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அந்த நூல்களோ, அவை பற்றிய கருத்துக்களோ, முக்தியை அளிக்க இயலாது.


தன்னை அறிதல் அல்லது மெய்ஞானம் உணர்தல்  ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நடைபெற வாய்ப்புள்ள ஒரு தனிப்பட்ட உள் அனுபவம் என்பதால், புனித நூல்களும், அவை பற்றிய விளக்கங்களும், அந்த அனுபவத்துக்கான வழிமுறைகளை வேண்டுமானால் வழங்கலாம், ஆனால் உண்மையான அனுபவத்தை - ஒருவரது உள்ளே உணரும் பேரானந்த நிலையை - அவற்றால் வழங்க முடியாது. இதனால், ஆன்மீகம் என்பது, மதத்தைக் கடந்த ஒரு தேடல் அனுபவம் என்பதைத் தெளிவாக அறியலாம்.


* ஔவைக் குறள் ~ ஸ்வாமியின் புதிய, எளிதான, குறள் வடிவில் அமைந்த ஔவையாரின் ஆன்மீக இலக்கியப் பெட்டகத்தை விளக்கும், குறுவலைப்பதிவுத் தொடர்.   



ஸ்வாமியின் நூற்றுக்கணக்கான மற்ற வலைப்பதிவுகளை நீங்கள் சுவைத்து மகிழலாம்.
Swamystery, Been There Seen That, Swamyview, Swamyverse, Swamygraphy, SwamyQuote (மேற்கோள்கள்), Swamyem (200+ #தினம்ஒருபதிகம் பதிகம் + விளக்கம்)
ஸ்வாமியுடன் ஃபேஸ்புக், கூகிள்+ மற்றும் ட்விட்டரில் தொடர்பு கொள்ளலாம்.