View vibrant Life in our Universe through Swamy's lens!

2 May 2017

ஔவைக் குறள் 73 ~ உள்ளமே கோயில், உணர்வே சிவம்!

ஔவைக் குறள் 73 ~ உள்ளமே கோயில், உணர்வே சிவம்

உள்ளமே பீடம் உணர்வே சிவலிங்கம்
தெள்ளியர் அர்ச்சிக்கும் ஆறு.

தமது ஹிருதயத்தைப் (உடல் உயிரோட்டத்துடன் இருக்க ரத்த ஓட்டத்தை நிகழ்த்தும் இதயம் அல்ல) பீடமாக்கி, அதில் உள் உணர்வைச் சிவலிங்கமாகப் பூஜித்து வழிபடும் முறையை அறிந்தோர் அறிவுத் (எதையும் பகுத்துப்பார்க்கும் காரண அறிவு அல்ல) தெளிவுடையோர் (ஞானோதயம் அடைந்தோர்).
பக்தர்கள் கோயிலுக்குச் சென்று, மலர்கள் மற்றும் அர்ச்சனைப் பொருட்களை அர்ச்சகரிடம் தந்து, அங்குள்ள இறைவனது உருவத்திற்குப் பூஜை செய்யக் கண்டு, பக்திப் பரவசமடைவது இயல்பு. இறை நம்பிக்கை சார்ந்த இவ்வழிபாட்டு முறையில் தவறேதுமில்லை என்றாலும், இத்தகைய வெளிப்புறச் செயலால் ஒருவர் மெய்ஞானம் அடைவது மிக அரிது.

அறிவுத் தெளிவுடையோர், அதாவது ஞானோதயம் அடைந்தோர், இறைவனை வெளியே தேடுவதில்லை. அவர்கள் தமது உள்ளத்தையே (ஹிருதயம் எனப்படும் உயிரின் இருப்பிடமான ஆன்மீக மையம்) இறைவனது திருவுருவம் அமைந்துள்ள பீடமாக்கி (ஆவுடையார்), தமது உள் உணர்வையே அருவமாகிய இறைவனது திருவுருவான சிவலிங்கமாக (படைப்பின் முதல் வடிவமாகிய அருவுருவம்), படைத்தலில் உள்ள அனைத்து உயிர்களையும் போலத் தம்முள்ளும் உறையும் இறையைப் (சிவமே எங்கும் நிறைந்த பரப்பிரம்மம்) பூஜித்து வழிபடுவர். இதுவே ஈசனை வழிபடுவதற்கான சிறந்த வழியாகும்.

அறுபத்துமூவருள் ஒருவராகிய பூசலார் நாயனார், தனது உள்ளத்தில் ஒரு மாபெரும் திருக்கோயிலையே, ஒவ்வொரு கல்லாக அடுக்கி, அற்புதமான முறையில் உருவாக்கினார். அவர் தனது உள்ளக்கோயிலில் ஈசனை எழுந்தருளச் செய்யக் குறித்த அதே நாளன்று, மாமன்னனாகிய காடவர்கோனும் (ராஜசிம்மன் என்கிற இரண்டாம் நரசிம்மவர்மன்) தான் கட்டிய பிரம்மாண்டமான புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவுசெய்தான். அப்போது கருணைக்கடலாகிய சிவபெருமான் அவனது கனவில் தோன்றி, தான் பூசலாரின் திருக்கோயிலில் எழுந்தருள வேண்டியிருப்பதால், அரசனது கைலாசநாதர் கோயில் குடமுழுக்கு விழாவை வேறொரு நாளைக்கு மாற்றுமாறு அறிவுறுத்தினார். தன்னைவிடப் பெரிய கோயிலைக் கட்டியது யார் என்று வியந்த மன்னன், பூசலாரைக் கண்டு வணங்கி அவரது கோயில் எங்குள்ளது என்று வினவியபோது, அவர் மலர்ந்த முகத்துடன் தனது ஹிருதயத்தைச் சுட்டிக்காட்டினார். இச்சம்பவம் ஔவைக்குறள் 73ல் பொதிந்துள்ள பேருண்மையைத் தெளிவாக்குகின்றது.


ஸ்வாமியின் ஒளவைக்குறள் குறுவலைப்பதிவுத்தொடர், குறள் செய்யுள் வடிவத்தில் அமைந்திருக்கும் ஒளவையாரின் அற்புத ஆன்மீகப் பெட்டகத்தின் விளக்க உரை.  

No comments:

Post a Comment

Thank you for investing precious time to view Life in our vibrant Universe through Swamy's lens. Kindly reflect on what you've learned and leave a comment. Feel free to share this post with other enthusiasts. Be Joyful & spread the cheer!