View vibrant Life in our Universe through Swamy's lens!

19 May 2017

ஒளவைக் குறள் 49 ~ வாழ்வளி வளிவழி

ஒளவைக் குறள் 49 ~ வாழ்வளி வளிவழி

வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுட் பெருக்கம் உண்டாம்.

சுவாசக் காற்றை எவ்வாறு உள்வாங்கி, அடக்கி, வெளிவிடுவது என்பதை முறையாக அறிந்து பயிற்சி செய்துவந்தால், ஆயுட்காலம் அதிகமாகும்.



ஒருவருடைய ஆயுட்காலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்று கூறப்படுவது மூடநம்பிக்கையோ, அறியாமையோ அல்ல. படைத்தவன் எல்லா உயிர்களுக்கும், எந்த விதமான பாகுபாடுமின்றி, ஒரே அளவு சுவாசத்தை நிர்ணயித்துள்ளான். படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் - மனிதர்கள் உட்பட - எவ்வளவு காலம் இயல்பாக வாழமுடியும் என்பது, அந்தத் தனிப்பட்ட உயிரானது சுவாசிக்கும் முறையைச் சார்ந்தது.

நாயானது, ஏறத்தாழ 12 முதல் 14 ஆண்டுகளே வாழும். அதைச் செல்லப்பிராணியாக வளர்க்கும் (அல்லது கல்லால் அடிக்கும்) மனிதன் 100 ஆண்டுகளுக்கு மேலும் வாழமுடியும் (தற்போது 60 முதல் 70 வரையே பெரும்பாலான மனிதர்கள் வாழ்கின்றனர்). சில வகையான ஆமைகள் பல நூற்றாண்டுகளாக வாழ்வது விஞ்ஞான முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்கின்றனர். இவை அனைத்திற்கும் உள்ள வேறுபாடு உருவிலோ, உணவிலோ, தங்குமிடத்திலோ இல்லை. அவை எவ்வாறு சுவாசிக்கின்றன - அதிவிரைவாக, அவசரமாக, நிதானமாக, மிகக்குறைந்த அளவில் - என்பதே அவற்றின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கின்றது.

தொன்மையான பாரத கலாசாரத்தில், உயிர் விஞ்ஞானம் மிக ஆழமாக ஆராயப்பட்டு, ஒருவரது ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு, முறையான பயிற்சிகள் உருவாக்கப்பட்டன. சுவாசத்தைப் பிராணவாயு என்று அறிந்துணர்ந்த ஞானிகள், அதனை முறையாக உள்வாங்கி (பூரகம்), தேக்கி (கும்பகம்), வெளிவிடுவதற்கான (ரேசகம்) வழிமுறையைப் பிராணாயாமம் என்று அழைத்தனர். தொடர்ந்து முறையாகச் செய்யும் பிராணாயாமப் பயிற்சிகள் மூலம், நல்லொழுக்கத்துடன் வாழும் யார் வேண்டுமானாலும் தனது ஆயுட்காலத்தை நீட்டிக்கமுடியும்.

பிராணாயாம விஞ்ஞானத்தின் ஆழ்ந்த உயிர்சார்ந்த உண்மையை அறிந்த அகஸ்தியர், பதஞ்சலி போன்றோர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்ததாகக் கூறப்படுவது மிகையற்ற உண்மை என்பதை நாம் அறியமுடிகின்றது. அளவாகப்பேசி, அமைதியாக தியானத்தில் ஈடுபடுவோர் ஆரோக்கியமாய் நீண்டகாலம் வாழ்வதற்கும், அதிகமாய்ப் பேசி உணர்ச்சிவசப்படுவோர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயக் கோளாறுகளால் அவதிப்படுவதற்கும், பிராணவாயு எனப்படும் மூச்சுக்காற்றைக் கையாளும் விதமே காரணம். பிராணாயாமம் போன்ற நுணுக்கமான உள்நோக்கிய வாழ்நாள் நீட்டிக்கும் வழிமுறைகளை அறியாமல், வெளி உருவத்தை அறுவைசிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் செப்பனிட்டு இளமையாக நீண்டகாலம் இருக்கக் கடுமையாக முயலும் தற்காலப் பிரபலங்களின் முயற்சிகளே நகைப்பிற்குரியவை.

பி.கு: ஆதியோகியாகிய சிவபெருமான் சக்திதேவிக்கு அளித்த 112 ஞானோதயம் அடையும் வழிமுறைகளில் (விஞ்ஞான பைரவ தந்திரம்), பிராணவாயு சார்ந்த வழிமுறைகளும் அடங்கும்.


ஸ்வாமியின் ஒளவைக்குறள் குறுவலைப்பதிவுத்தொடர், குறள் செய்யுள் வடிவத்தில் அமைந்திருக்கும் ஒளவையாரின் அற்புத ஆன்மீகப் பெட்டகத்தின் விளக்க உரை. 


No comments:

Post a Comment

Thank you for investing precious time to view Life in our vibrant Universe through Swamy's lens. Kindly reflect on what you've learned and leave a comment. Feel free to share this post with other enthusiasts. Be Joyful & spread the cheer!