View vibrant Life in our Universe through Swamy's lens!

5 May 2017

நாலடியார் 400 ~ பாடல் 193 ~ களாக்காயும் பலாக்காயும்

நாலடியார் 400 ~ பாடல் 193

களாக்காயும் பலாக்காயும்

உறுபுலி யூனிரை யின்றி யொருநாள்
சிறுதேரை பற்றியும் தின்னும் - அறிவினால்
கால்தொழில் என்று கருதற்க கையினால்
மேய்தொழில் ஆங்கே மிகும்.

தனக்குப் பிடித்த இறைச்சி உணவு கிடைக்காத பொழுது, வலிமைமிகுந்த புலியானது சிறிய தவளையைப் பிடித்து உண்ணும். அதுபோல, கிடைக்கக்கூடிய வாய்ப்பை, காலால் செய்யக்கூடிய இழிவான தொழில் என்று கருதாமல், ஒருவன் தனது அறிவுத்திறனைக் கொண்டு சிறப்பாகச் செய்தால், அச்சிறு தொழிலைச் செய்துவரும் காலத்திலேயே, கையால் செய்யும் தகுதியுடையதாகக் கருதப்படும் மேலான தொழில் தானாகவே வாய்க்கும்.

கணிணி மென்பொருள் சேவை நிறுவனங்களில் பணிபுரியும் பலர் - குறிப்பாக நீண்டகால அனுபவம் உள்ளோர் - தற்போது தங்களது பதவியை இழந்து, இனி என்ன செய்வது என்று யோசிக்கும் நிலை இன்றுள்ளது. தற்போது அரசியல் மற்றும் பொருளாதார நிலையால், அவர்கள் உடனடியாக வேறொரு நிறுவனத்தில் உயர்பதவி பெறுவதற்கான வாய்ப்பில்லை.

ஆகையால், பசித்த புலி போன்ற நிலையிலுள்ள அவர்கள், தங்களது அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தக்கூடிய எந்த வாய்ப்புக் கிடைத்தாலும், அதை இழிவாகக் கருதாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் கிடைத்த வாய்ப்பில் முழுமையான ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செயல்பட்டால், அதன்மூலமாகவே வேறொரு சிறப்பான வாய்ப்பு அவர்களுக்கு விரைவிலேயே கிடைக்கலாம்.

தான் இழந்த பதவியின் பழைய நினைவிலே ஊறிக்கிடந்து, அதுபோன்ற மற்றொரு வாய்ப்புக்காகக் காத்திருந்து, கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் துச்சமாக எண்ணி ஒதுக்கினால், “மரத்திலிருக்கும் பலாக்காயைவிடக் கையிலிருக்கும் களாக்காய் மேல்!” என்ற பழமொழிக்கு அவர்களே புதிய உதாரணமாகிவிடுவர்.

~ஸ்வாமி | @PrakashSwamy

No comments:

Post a Comment

Thank you for investing precious time to view Life in our vibrant Universe through Swamy's lens. Kindly reflect on what you've learned and leave a comment. Feel free to share this post with other enthusiasts. Be Joyful & spread the cheer!